Skip to main content

16. தெய்வாசுர சம்பத் விபாக யோகம் - பகவத்கீதை - The Eternal Way

   

THE ETERNAL WAY
Author: Roy Eugene Davis

பகவத்கீதை (தமிழில் உட்பொருள் உரைச் சுருக்கம்) 
Tamil Re-Phrasing, Reflections and Remarks 
by V.R. Ganesh Chandar (V.R. கணேஷ் சந்தர்)

பகவத் கீதை பதினாறாம் அத்தியாயம்

16. தெய்வாசுர சம்பத் விபாக யோகம் 
(உயர் கீழ் குண பேதங்களை விசாரித்தல் எனும் யோகம்.)


அத்தியாய முகவுரை:

மனிதப் பிறவி நிலைக்குப் பொதுவான தன்மைகள் பற்றிய மேல்விவரங்கள் விவரிக்கப்படுகின்றன. இதனால், சாதகன் உயர்நிலையைத் தேர்ந்தெடுத்து துயரங்களைத் தவிர்த்து உயருண்மைக்கு விழிப்பாகிறான்.


கிருஷ்ணன் கூறினான்.
16.1. அச்சமின்மை, இதயத்தூய்மை, ஞானத்துடன் யோக சமாதிக்குட்படுதல், கருணைக்கொடை, சுயக்கட்டுப்பாடும் புனித தானங்களும், புனித கிரந்தங்களை வாசித்தல், சடங்காச்சாரம், நீதிகாத்தல்

16.2. அகிம்சை, உண்மை, கோபமின்மை, துறவு, அமைதி, குற்றங்காணாமை, அனைத்து உயிர்ப்படைப்புக்கள் மீதும் கருணை, ஏக்கமின்மை, நளினம், அடக்கம், சபலமின்மை.

16.3. தேஜஸ், மன்னிக்கும்குணம், இடுக்கண் தளராமை, தூய்மை, துரோகம் செய்யாமை, கர்வமின்மை ------ ஆகியன தெய்வத்தன்மை பொருந்தியவனுடைய லட்சணங்கள்.

உரை:
இந்த நடத்தைகளும் தன்மைகளும் சாத்வீகமானவை. அவை வாழ்வை வளர்ப்பவையும் உயர்த்துபவையும் ஆகும். இயல்பூக்கத்தில் இவை வெளிப்பட்டால் அது ஆன்மீக விழிப்புணர்வையும் ஆக்கபூர்வ கர்மாக்களின் அபரிமிதத்தையும் குறிக்கும்.

16.4. வேஷமிடுதல், வெறித்தனம், கர்வம், கோபம், இம்சை, மரியாதையின்மை, அலட்சியம்,  ஆகியன அசுரத்தன்மை பொருந்தியவனுடைய லட்சணங்கள்.

உரை:
இந்த நடத்தைகள் மற்றும் குணங்கள் ராஜஸம் மற்றும் தாமஸீகமானது. அவை வாழ்வைச் சுருக்குவது மற்றும் விழிப்புணர்வினை பந்திப்பது. இயல்பூக்கத்தில் இக்குணங்கள் வெளிப்பட்டால், அல்லது நெருக்கடியின்போது கட்டிழந்து வெளிப்படுவதானது, தெளிவற்ற கோளாறான ஆன்மீக விழிப்புணர்வினையும் அழிவுப்பூர்வ கர்மாக்கள் மலிந்து கிடப்பதனையும் குறிக்கும்.

16.5. தெய்வீக கதி அல்லது தெய்வீக சம்பத்து விடுதலைக்கு இட்டுச் செல்லும். அசுரகதி அல்லது அசுர சம்பத்து பந்தப்படுதலுக்கு இட்டுச் செல்லும். வருத்தப்படாதே. நீ தெய்வ சம்பத்துடன் பிறந்திருக்கிறாய். 

உரை:
தெய்வீக் தூண்டலுடனான வாழ்வோ உணர்வின் விடுதலையை வெளிப்படுத்தவதாக இருக்கும். ஆனால் நிர்ப்பந்திக்கப்பட்ட சுய ஊட்ட வாழ்க்கைப் பாதையோவெனில் மாறாதிருக்கும் வரை, தொடர்ந்த கட்டுண்டிருத்தலை விளைவிக்கும். இந்த ஸ்லோகத்தில், ஆன்மாவானது, இறையனுபூதியை அடையத்தக்க தெய்வீக சம்பத்துடன் இருப்பதாக ஆர்வமூட்டப்படுகிறது.

16.6. இவ்வுலகத்தினில் உயிர்ப்படைப்பின் இரண்டு வகைகளைக் காணலாம். தெய்வத்தன்மை மற்றும் அசுரத்தன்மை. தெய்வத்தன்மையைப் பற்றி விவரிக்கப்பட்டது. இனி, அசுரத்தன்மை பற்றி கேட்பாயாக.

உரை:
எல்லா ஆன்மாக்களும் தெய்வீகமானவை என்றாலும் அத்தன்மைக்கு எல்லா ஆன்மாக்களும் விழிப்படைவதில்லை. சிலர் விழிப்படைகின்றனர். சிலர் அவ்வாறு விழிப்படைவதில்லை. இவ்விஷயத்தில் இரண்டு எல்லைகளுக்கிடையே கலவையான பல நிலைகள் உள்ளன.

16.7. அசுர சம்பத்துடனான மக்கள் எப்போது செயல்படுவது எப்போது செயலற்றிருப்பது என அறியார். தூய்மையோ, நன்னடத்தையோ, உண்மையோ அவர்களிடம் காணப்படுவதில்லை.

உரை:
மயக்குறு மக்களோ நுண்ணறிவுக் குறைப்பாட்டால், சரியான நடத்தையோ ஆக்கபூர்வ நடத்தையோ இன்றியும் எப்போது செயலற்றிருப்பது எனவும் அறியார். அவர்களின் மனமோ தவறான சிந்தனைகளாலும் மயக்குறு பாவனைகளால் குழம்பியும் அசுத்தமாக இருக்கிறது. அவர்கள் ஆக்கபூர்வ செயலாற்றுவதில்லை. தனது உள்ளார்ந்த இறைமையின் ஞானக் காட்சியோ, இயற்கைப் போக்குகளோ, இறைமை பற்றிய அவர்களின் அறிவோ, அவர்களின் ஜாக்ரதை நிலையில் விவேகித்தறியப்படுவதில்லை.

16.8. இந்த பிரபஞ்சம் சத்யநிலைப்பாடற்றது, ஆதாரமற்றது, இறைமையற்றது, காரண காரியத் தொடர்ச்சியில் உருவானது அல்ல, ஆனால், இச்சை மாத்திரத்தாலேயே என பலவாறாக அவர்கள் பிதற்றுவார்கள்.

உரை:
மயக்குறு மக்கள் பிரபஞ்சத்தை அர்த்தமற்றதென ஸ்தாபிப்பார்கள். அதனைக் காப்பாற்றும் ஆதாரம் ஏதும் இல்லை எனவும், இறைமை என்பது இருப்பற்றது எனவும் கூறுவார்கள். பிரபஞ்சம் ஜடவஸ்துவால் ஆனதென அவர்கள் வலியுறுத்துவார்கள். பெற்றோர்களின் இச்சாவலிமையினாலேயே குழந்தைகளும் படைப்புகளும் பிறக்கிறதெனவும் பறை சாற்றுவார்கள்.

16.9. தங்களை அறியாததனால் தங்களையே இழந்தவர்களான இவர்கள் இக்கருத்தினை வைத்துக் கொண்டு குறை அறிவுடனும் குரூர செயல்களுடனும் இவ்வுலகத்தின் எதிரிகளாக வலம் வருவார்கள்.

உட்பொருள்:
மயக்குறு மனத்தாலும் தவறான புரிதலாலும் மறைக்கப்பட்டவர்களாய் குழம்பிய ஆன்மாக்கள் உண்மையை பொய்யிடமிருந்து பிரித்தறிவதில்லை. அவர்களின் சுய ஊட்ட மைய மற்றும் அழிவுப் பூர்வ நடத்தைகள், அடிக்கடி அவர்கள் படைப்புக் காரியத்துடன் விரோதமானவர்களாகத் தங்களை வைத்துப் பார்க்கக் காரணமாயிருக்கும்.

16.10. திருப்தியுறாத ஆசைகளுடன் போலித்தனம், வெறியாட்டம் மற்றும் கர்வம் நிறைந்தவர்களாய் மயக்குறு மனத்தினராய் பொய்க் கருத்துக்களுடன் தூயதற்ற தீர்மானத்துடன் செயல்படுவார்கள்.

உரை:
ஆன்ம விழிப்பற்ற பலரும் உலகில் மனித வாழ்க்கை என்பது ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளவே என நினைக்கின்றனர். ஆணவத்துடன் இருப்பவர்களான சிலரோ அவர்கள் எது அல்லவோ அது இருப்பது போன்று காட்டிக் கொண்டு தாங்கள் மிகச் சரியாக இருப்பது போன்ற பாவ்லா  செய்து, ஸ்திரத்தன்மை உடையவர்களைப்போல மேலதிகமாய்  நடித்து, ஆளுமைச்சிறப்புப் உடையவர்களைப் போல தங்களை விசேஷித்தவர்களாய் பாவித்து, ஆனால் அதே சமயம் அவ்வாறு தங்களை மிகைப்படுத்துபவர்களாகக் காட்டிக் கொள்வதைக்கூட அறியாமல் காட்டி வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இக்கோளாறுகள் அனைத்தும் புத்தியின் தவறுதலினால் தோன்றுகின்றன. 

16.11. மரணமடையும்வரை ஓயாத எண்ணற்ற கவன இலக்குகளில் மனம் குவித்து இச்சை பூர்த்தியே உயர் இலக்காகக் கொண்டு இதுதான் வாழ்க்கை என எண்ணித் திருப்தியுற்று,

16.12. ஆயிரமாயிரம் ஆசாபாசக் கொக்கிக் கெடுபிடிகளில் சிக்கி, ஆசை மற்றும் கோபங்களில் ஈடுபட்டு, இச்சைபூர்த்திக்காக நெறிதவறியாவது சொத்து சேர்க்க விழைகிறார்கள்.

16.13. "இது இன்று என்னால் பெறப்பட்டது; இந்த ஆசையை நான் இன்னும் அடைய வேண்டும்; இது என்னுடையது, இந்த ஆஸ்தியும் என்னுடையதாக ஆகட்டும்," எனக் கூறுவார்கள்.

16.14. "அந்த எதிரி என்னால் கொல்லப்பட்டான்,  நான் பிற எதிரிகளையும் கொல்ல வேண்டும்; நான் பிரபு, நான் அனுபவிப்பவன். நான் வெற்றியாளன். நான் ஆற்றல் மிக்கவன். நான் மகிழ்ச்சியானவன்," எனப் பேசுவார்கள்.

16.15. "நான் செல்வந்தன் மற்றும் உயர்குடிப்பிறப்பாளன். யார் எனக்குச் சமம்? நான் வேள்வி செய்து புனிதக்கொடைகளையும், தானங்களையும் அளித்து மகிழ்வேன்," என இவ்வாறு பகர்ந்து அவர்கள் அறியாமையில் உழல்கிறார்கள்.

16.16. கட்டுப்பாடற்ற பல கற்பனைகளால் உந்தப்பட்டு, மயக்க வலையில் மாட்டிக்கொண்டு, இச்சாபூர்த்தத்திற்கே தங்களை பந்தித்துக் கொண்டு, அவர்கள் தூயதற்றச் சூழலில் சிக்குகிறார்கள்.

16.17. டாம்பீகமாய், பிடிவாதமாய் கர்வம் மற்றும் செல்வ வெறியாட்டம் ஆடி, புனிதக்கொடைகளை அவர்கள் பகட்டுக்காக தர்ம நெறி பிறழ்ந்து செய்கிறார்கள்.

16.18. ஆணவம், பலவந்தம், மதிப்பின்மை, ஆசை, கோபம் ஆகியவற்றை பற்றிக்கொண்டு, இந்த கொடூரவாதிகள் தங்கள் சொந்த உடலின் மற்றும் பிறரின் உள் இறைமையான என்னை வெறுக்கிறார்கள். 

உரை:
இங்கே நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், மேல்சொன்னவை ஆன்ம விழிப்பற்றவர்களின் சில குணாதிசயங்களே. இக்குணங்களுக்கான காரணங்களாவன:-  அறியாமை, மன நிர்ப்பந்தங்கள், பிற கோளாறுகள். இவைகள் ஆன்மாவுக்கு இயல்பாயல்லாதவை.

16.19. என்னை வெறுக்கும் இந்தக் கொடூரவாதிகளை நான் அவர்களின் தன்மைகளுக்கேற்ப சூழல்களில் மறுபிறப்புச் சுழற்சியில் உழற்றுகிறேன். 

உட்பொருள்:
ஆணவமையமுடைய குழம்பிய ஆன்மாக்கள் அவர்களின் உணர்வு நிலைக்கேற்ப அறியாமையால் உந்தப்படுகிறார்கள்.

16.20. பல ஜென்மங்களுக்குப் பிறகு இன்னமும் மயக்குறு மனத்துடன் இருந்து என்னை அறியாதிருந்தால், அவர்கள் இன்னம் தாழ்ந்த நிலைக்குப் போகிறார்கள்.

உட்பொருள்:
அடுத்தடுத்த பிறவிகளில் இறையனுபூதிக்கு விழிப்படையாத ஆன்மாக்கள் மேலும் தரம் தாழ்ந்த மயக்குறு நிலைக்கு ஆளாகிறார்கள்.

உரை:
சில ஆன்மாக்கள் அடுத்த அடுத்த பிறவிகளில் குழம்பிய வலி மிகுந்த சூழல்களை அனுபவிப்பது அவர்களுக்கு அவை கெட்ட கனவாக தொடர்ந்து உறுத்திக் கொண்டிருந்தாலும், இறுதியில் அவர்கள் ஒருவாறு நன்னிலைக்கு விழிப்படைவார்கள். ஆன்ம விழிப்பு ஆர்வம் இல்லாதிருந்தாலும், பரிணாமச் சுழற்சி மற்றும் இறைக் கருணை – இவை இரண்டும்  ஆன்ம திறவாதலை வழிப்படுத்தும்.

16.21. அழிவுச் சூழலுக்கான கதவுகள் மூன்று படித்தரமானவை. --- இச்சை, கோபம், பேராசை. இவைகளைத் தியாகம் செய்யவேண்டும்.

உரை:
வாழ்வை வளப்படுத்துவதும் ஆக்கப்படுத்துவமான ஆசை தீங்கல்ல. அறியாமையால் தூண்டப்பட்ட ஆசைகள், திருப்தியுறாத ஏக்கங்கள் அழிவுப்பூர்வமானவை. சுய ஊட்ட ஆசை நிறைவேறாதபோது ஏமாற்றத்தினால் கோபமாக மாறி விழிப்புணர்வை கதிகலக்கி நம் மதியூகத்தில் குறுக்கிடும்.  பேராசை என்பது சுய நலமும் பாதுகாப்பின்மை உணர்வில் தோன்றுவதுமாகும். அழிவுப்பூர்வ ஆசை, அடங்காத கோபம், பேராசை, ஆகியனவற்றை மகிழ்வான, ஆரோக்கியமான, நிறைவான வாழ்வு தரும் ஆன்ம வளர்ச்சியை விரும்பும் சாதகன் தியாகம் செய்யவேண்டும்.

16.22. இருட்டின் இம் மூன்று வாசல்களிடமிருந்து விடுபட்டு, ஆன்மாவுக்கு ஆக உகந்ததைச் செய்து மேம்பட்ட இலக்கினை அடைகிறான்.

உட்பொருள்:
அழிப்பதான இச்சை, கோபம், பேராசை ஆகியனவற்றை முற்றும் துறந்து இறைச்சரணாகதி பெற்ற சாதகன் ஆன்மலாபத்திற்கு உகந்த நடத்தைகளையே தேர்ந்தெடுக்கிறான். இதனால், ஆன்மீக வளர்ச்சி விரைவானதாயும் நிறைவானதாயும் இருக்கிறது.

16.23. கிரந்த வழிகாட்டுதல்களையும் செயல்களையும் ஆசைகளால் துண்டப்பட்டவனாய் மதிக்காதவன், மேன்மையையோ, மகிழ்ச்சியையோ, உயர்தன்மையையோ அடைவதில்லை.

உரை:
ஆன்மீக வளர்ச்சிக்கும் நலத்திற்கும் ஆதரவான வாழும் முறைகளை அலட்சியப்படுத்தும் சாதகன், சுய ஊட்ட இச்சை மற்றும் நிர்ப்பந்தங்களால் சிந்தனையின்றி செயல்பட்டு, உணர்வின் ஒளியையும் ஆன்ம தன்மைகளின் செயலாக்கத்தையும் உடனடியாக அனுபவிப்பதில்லை. தேவையான சில முன்னேற்றங்களை செயலின்றி வெறுமனே எதிர்பார்ப்பதும், இயல்கடந்த விஞ்ஞானத்தை கற்றும் ஆனால் கற்றதை நடைமுறைப்படுத்தாமல் இருத்தலும் திருப்திகரமான ஆன்ம வளர்ச்சியை தருவதில்லை.

16.24. எனவே, நீ என்ன செய்யவேண்டும் எனவும், செய்யாமல் வாழவேண்டுமெனவும் நிர்ணயிக்க கிரந்தங்கள் உறுதியான வழிகாட்டித்தருபவையாய் இருக்கட்டும். சரியான வழியறிந்து உலகில் காரியமாற்று. 

உரை:
ஒளியூட்டம் பெற்ற ஆசான்கள், தாங்கள்  சொல்வதை அப்படியே சிந்திக்காமல் ஏற்பதை வலியுறுத்துவதில்லை. பரிந்துரைக்கப்படுவது என்னவென்றால், கற்றதை செயல்களத்தின் அக்னிப் பரிட்சைக்குள்ளாக்கி சொந்த அனுபவங்களால் கற்றதை மதிப்பீடு செய்து ஏற்பதே. 

முழுமை அறிவியலான யோக கிரந்தமான, கிருஷ்ணார்ஜுன உரையாடலான, கீதோபநிஷத்தில், தெய்வாசுர சம்பத் விபாக யோகம் என மூலத்திலும், உயர் கீழ் குண பேதங்களை விசாரித்தல் எனும் யோகம்என இவ்வுரையிலும்  தலைப்பிடப்பட்ட  16 ம் அத்தியாயம் நிறைவுபெறுகிறது.


Comments