Skip to main content

14. குணத்ரய விபாக யோகம் - பகவத்கீதை - The Eternal Way

   

THE ETERNAL WAY
Author: Roy Eugene Davis

பகவத்கீதை (தமிழில் உட்பொருள் உரைச் சுருக்கம்) 
Tamil Re-Phrasing, Reflections and Remarks 
by V.R. Ganesh Chandar (V.R. கணேஷ் சந்தர்)

பகவத் கீதை பதினான்காம் அத்தியாயம்

14. குணத்ரய விபாக யோகம் 
(இயற்கையின் குணங்களைப் பகுத்தறியும் யோகம்)


அத்தியாய முகவுரை:

பேரான்மாவும் ஜட இயற்கையும் தங்களுக்குள் செய்யும் கலப்பு நிகழ்வால் வியக்த ஆன்மா மற்றும் பிரபஞ்சம் தோன்றுகிறதென முன்னரே விளக்கப்பட்டது. அவ்வியற்கையின் தனிப்பட்ட குணங்கள் எவ்வாறு பிரபஞ்ச சக்தியை இயக்கி, ஆன்ம விழிப்பு, தனி நபர் நடத்தைகள் மற்றும் சூழ்நிலைகளுக்குக் காரணமாகிறதெனும் குறிப்பிட்ட பல விவரங்கள் மேலும் விளக்கப்படுகின்றன: 
குணங்கள் என்றால் என்ன?
மனப் போக்குகளையும் உணர்வுநிலைகளையும் குணங்கள் எவ்வாறு பாதிக்கின்றன?
இயற்கையின் ஆதிக்கத்திலிருந்து ஒருவன் விடுபடுவதெப்படி?
விடுவிக்கப்பட்ட ஆன்மாவின் சில தன்மைகள் என்ன?
இவ்வத்யாத்தில் இவைகளுக்கு விடையளிக்கப்படுகின்றன.

கிருஷ்ணன் கூறினான்.
14.1. எதையறிந்ததனால் ஞானிகள் உன்னதப் பூரணத்தை அடைந்தனரோ, அந்த உயர்ந்த சிறந்த அறிவை நான் மீண்டும் பிரகடனப்படுத்துகிறேன்.

உட்பொருள்:
எல்லாவற்றிலும் சிறந்த (ஆன்மாவின்) உள்ளடக்க அறிவு, உன்னுள் மீண்டும் திறவாகும். இவ்வறிவைக் கொண்டுதான் உள்ளொளி பெற்ற ஆத்மாக்கள் ஆன்மீக நிறைவுக்கு விழிப்புற்றன.

உரை:
உள்ளொளி பெற்ற ஆன்மாக்கள் ஆன்ம நிறைவு எனும் மோட்சம் "அடைவதென்பது", சுய ஊட்ட நிலையிலிருந்து உயருணர்வு நிலைக்கு விழிப்படைவதே. அது என்னவென்றால், 
கட்டுக்குட்பட்ட புரிதலிலிருந்து விடுபட்டு, பேருணர்வு மற்றும் அதன் காரியங்களின் இருப்புண்மையை  சுய விளக்கத்தால் புரிந்து கொள்ளப்படுவதான சுதந்திரம்.

14.2. இவ்வறிவில் கருத்தூன்றியும் என்னில் லயித்தும் இருப்பதால், படைப்பியற்கையில் பிரபஞ்சத் தோற்றத்தின்போது அவர்கள் மீண்டும் ஜனிப்பதில்லை, அவர்கள் பிரபஞ்ச பிரளயத்தின்போதும் பாதிக்கப்படுவதில்லை. 

உட்பொருள்:
இவ்வறிவில் கருத்தூன்றி இறையனுபூதிக்கு நிலைத்து பூரண ஒளியூட்டம் பெற்ற ஆன்மாக்கள், இயற்கைப் பரப்பில் புதுப் பிரபஞ்சத் தோற்றத்தின்போது ஜனிப்பதில்லை. பிரபஞ்ச பிரளயத்தின்போதும் அவர்கள் பாதிப்படைவது இல்லை.

14.3. மஹத் எனும் பெரும் பிரக்ருதியே தான் என் கருப்பை. அதில் என் பீஜத்தை வைக்கிறேன். அதிலிருந்து எல்லா படைப்புகளும் தோன்றுகின்றன. 

உட்பொருள்:
மூல இயற்கையுடன் இறைமையின் வெளிப்பாட்டு அம்சத்தின் உறவே, பேரான்மா தன் பிரபஞ்ச வெளிப்பாட்டினை ஆரம்பிக்கும் இடம். இறைமுகப்பின் பரப்பில் தானாக ஏற்படும் படைப்புக்கான சிலிர்ப்பினை மூல இயற்கை ஏற்று ஏதுவாக்கிக் கொள்கிறது.

உரை:
தூயப் பேருணர்வுப் பரப்பின் வெளியானது தேவையோ ஆசையோ உள்ளதாக நாம் அனுமானிக்க முடியாதாகையால், பிரபஞ்ச வெளிப்பாடும் பிரளயமும் நோக்கமற்றதாகத்தான் அறிந்து கொள்ளவேண்டும். இவ்விதம் பேருணர்வு தன்னை வெளிக்காட்டிக் கொள்ளுதலானது, அதன் ஒரு தன்மைதான் எனக் கொள்ளவேண்டும். நுண்ணுணர்வு இதனைப் புரிந்துகொள்ள இயலாதாகையால், ஆன்மா தன் உள்ளுணர்வால்தான் இதனைப் புரிந்து கொள்ளவேண்டும்.

14.4. எல்லா கருப்பைகளிலும் எந்தெந்த உருவங்கள் பிறக்கின்றனவோ, அவற்றிக்கு மஹத் எனும் பெரும் பிரக்ருதியே பிறப்பிடமாகிய க்ஷேத்ரம் அல்லது தாய். நானே கர்ப்பாதானம் செய்யும் தகப்பன்.

உட்பொருள்:
இயற்கையில் எது தோன்றினாலும் இறைமையின் வெளிப்பாட்டு அம்சம்தான் அவற்றுக்கெல்லாம் ஆதாரம் மற்றும் அதன் சிலிர்ப்புதான் அதனைச் சாத்தியமாக்குகிறது.

உரை:
பிரபஞ்ச வெளிப்பாடு தொடங்கி, வேதியியல் மாற்றங்கள், சக்திநிலை மாற்றங்கள், உயிரியல் காரியங்கள், ஆகியனவற்றை நடப்பிப்பது இறைமைதான். சக்தி, வாழ்க்கை, மற்றும் உள்ளார்ந்த நுண்ணறிவுமின்றி, இயற்கைக் காரியங்கள் எதுவும் சாத்தியமல்ல. பேருணர்வுதான் வெளிப்படுகின்ற யாவற்றுக்கும் ஆதாரமும் ஆதரவும்.

14.5. சத்வம், ரஜஸ், தமஸ், எனும் இயற்கையின் மூன்று குணங்கள்தான் அழியாத உட்பொருளான உயிரை உடலுடன் கட்டிப்போட்டிருக்கிறது. 

உரை:
இம்மூன்று குணங்கள்தான் ஜட இயற்கைப்பரப்பில் பிரபஞ்சத்தின் சக்திகளை முடுக்கி இயக்குவதாகும். இவைகள் இறைமையின் வெளிப்படு உணர்வுப்பரப்பின் காந்தமயமாக்கப்பட்ட இயங்குதிசை நீட்சியாகும். நேர்முனையிலிருந்து சத்வமும், எதிர்முனை திசையிலிருந்து தமஸ்ஸும், இரண்டிற்குமிடையே பரிவர்த்தனை செய்து சமன்படுத்த முனை சாராமல் ரஜஸ்ஸும் உள்ளன. தொலைவிலோ அல்லது நம் கை தொடுதூரத்திலோ, பிரபஞ்சம் முழுவதும் அவைகளின் ஆதிக்கத்தைக் காணலாம். ஜட இயற்கைப் பரப்பில் இயங்கி ஆன்மாவுடன் அவை மறைமுகமாகத்தான் உறவில் உள்ளன. 
ஆன்மா எப்போது உடல் மற்றும் மனத்துடன் உறுதியாக அடையாளப்படுத்திக் கொள்கிறதோ அப்போது இக்குணங்கள் உடல் மற்றும் மன நிலைகளைப் பாதித்து விழிப்புணர்வு வெளியினைக் கலக்குகின்றன. இக்குணங்களின் ஆதிக்கவிசை எப்படி நம்மில் உள்ள “அழியா உட்பொருளை” பந்திக்கிறது என்பது பின்வரும் ஸ்லோகங்களில் விவரிக்கப்படுகின்றன.

14.6. இம்முக்குணங்களில், சத்வம், ஒளியூட்டுவதும் ஆரோக்கியமளிப்பதும் ஆகும். ஆன்மாவை மகிழ்ச்சியுடனும் அறிவுடனும் இணைப்பதன் மூலம் சத்வம் அதனை வசப்படுத்துகிறது.

உரை:
சத்வம் என்ற பதத்திலுள்ள சத் என்பது உண்மை எனும் பொருள்படும். இறைமையின் வெளிப்படுப் பரப்பின் நேர்நிலை முனையின் தன்மையே சத்வம். அது கவர்ச்சியை தன் வலியசக்தியாக வைத்துள்ளது. தமஸ் மற்றும் ரஜோ குணங்களைத் தன்னுள் இழுத்து சத்வம் நிஸ்சலனத்தை சித்திக்கிறது. குளிர்ச்சி, வாழ்வூட்டம், சுத்தீகரிப்பு, மற்றும் மீட்சி ஆகியன அதன் செயல்கள். அது மனதை ஒளிர்விக்கிறது. உடலின் பளுவற்ற தன்மை, ஆரோக்கியம், மேன்மையான இயக்கத் திறன்கள் ஆகியன சத்வகுணத்தின் ஆதிக்கமே.

ஜீவாத்மா கீழ்க்கண்டவைகளால் இக்குணத்தின் பற்றுக்கு காரணமாகின்றது: 
1. ஆன்மீக முன்னேற்றத்தில் பெறும் சூட்சமமான பெருமிதமும், அதிசயக் கண்டுபிடிப்பாக உதிக்கும் எண்ணங்களால் வரும் மகிழ்ச்சியும் உட்பட, எல்லா வகை மகிழ்ச்சிகளும். 
2. வாழ்க்கைக் கதிப்போக்கு மற்றும் இறைமை பற்றிய பேரறிவு.

இவ்வகை சூட்சமமான அனுபவங்களின் மேலுள்ள பற்றினையும் துறக்கும்போது பூரண ஆன்ம  விழிப்பு எளிதில் சித்திக்கிறது.

14.7. ரஜஸ் என்பது ஏக்கம் மற்றும் பற்றினால் உந்தப்பட்ட உத்வேகத்தன்மை உள்ளது. இது [ஆன்மாவை] செயலில் பற்றுகொள்ள வைத்து முடக்கும்.

உரை:
ரஜஸ் குணம் என்பது ஆசைகளைப் பூர்த்திக்க உதவுவது. உடலெடுத்த ஆன்மா, புலன்களால் பொருட்களுடன் அல்லது விஷயங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி,  செயல்படுவதற்கான உத்வேகம் அளித்து அதன் ஆசைகளைத் தற்காலிகமாக தணிவித்துக் கொள்கிறது. இந்தக் குணம்தான் காரியமாற்ற உதவி நம்மில் வாழ்வார்வ முடுக்கினைக் கொடுக்கிறது.. சக்தியூட்டுதல், ஜ்வாலை போன்று பரபரப்பாக்குதல், செயல்தூண்டல் ஆகியன இதன் செயல்கள். ஆசைகள் நெறிப்படுத்தப்படவில்லை என்றாலும் மனச் சஞ்சலத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்றாலும், பயனற்ற செயல்பாடுகளில் இது ஈடுபடுத்தும். செயலைச்செய்யாமல் பலவந்தமாக அடக்கி முடக்குவதாலும், போக்குதிசையறியா எண்ண ஒட்டம், உணர்ச்சி நிலை தடுமாற்றம் ஆகியனவற்றை ஏற்படுத்தும்.

14.8. அறியாமையிலிருந்து பிறப்பதுதான் தமஸ் குணம். அது உடலெடுத்த எல்லா படைப்புக்களையும் குழம்பவைப்பது. இது [ஆன்மாவை] அலட்சியம்,   சோம்பியிருத்தல், மற்றும் உணராமை ஆகியவற்றில் பற்றுகொள்ள வைத்து முடக்கும். 

உரை: 
இறைமையின் வெளிப்படுப் பரப்பின் எதிர்நிலை முனையின் தன்மையே தமஸ். அது விலகலைக் குணமாகக் கொண்டு செயல் மரத்துப் போதல் அல்லது செயல்படுதரமற்ற கனம் கொண்டிருக்கும். செயல்பாட்டில் தாமதம், மந்தகதி, உணராமை ஆகியன இதன் பங்களிப்புகள். அதாவது, விழிப்பு நிலையை கலக்குதல், மன இருள், ஊடுருவுப் பார்வையை பலவீனப்படுத்தல், நுண்ணறிவைக் குறைத்தல் முதலியன.

14.9. மகிழ்ந்திருத்தல் மீதான பற்றினை சத்வம் வளர்க்கும். செயல் மீதான பற்றினை ரஜஸ் வளர்க்கும். அறிவைக் குழப்பி அறியாமையைப் பீடிக்கச் செய்வது தமஸ்.

உரை:
வாழ்வை அனுபவிப்பதும் மகிழ்ந்திருப்பதும், அவைகளுக்கான காரணமானவற்றிடம் நாம் பற்றுகொண்டு இறுக்கத்தை உண்டாக்காதவரை, நம் ஆன்மீக வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்காது. ஆக்க பூர்வ செயல்பாடும், நோக்கத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதும் நிர்ப்பந்தமின்றிச் செய்யமுடிந்தால் பயனுள்ளதே. என்றாலும், ராஜஸத்தை நிர்வகித்து, தமஸை பலவீனப்படுத்தி விலக்கச் செய்வதே அறிவார்ந்த அணுகுமுறை. 

14.10.  சத்வத்தின் ஆட்சி மேலோங்குகையில் அது ராஜஸ தாமஸ குணங்களை அடக்கியாள்கிறது. ராஜஸத்தின் ஆட்சி மேலோங்குகையில் அது சத்வ தாமஸ குணங்களை அடக்கியாள்கிறது. தாமஸத்தின் ஆட்சி மேலோங்குகையில் அது சத்வ ராஜஸ குணங்களை அடக்கியாள்கிறது.

உரை:
முக்குண ஆதிக்கம் பேருணர்வின் சர்வ வியாபகத்திற்கு ஒப்பானது. ஏனென்றால் அது பேருணர்வின்  முனை திசைகளிலிருந்து தோன்றியதே. ஒரு குணத்தின் ஆட்சி மேலோங்குகையில் பிற இரண்டும் பலவீனமடையும் அல்லது தெளிவாக இருக்காது. ஏதேனும் இரண்டு குணங்கள் மேலோங்கினால் மூன்றாவது பலவீனமடையும் அல்லது தெளிவாக இருக்காது. சாதகர்கள் அறிவுறுத்தப்படுவது என்னவென்றால், அவர்கள் நல்லூக்கத்துடன் (சத்வ குணம்) ஆக்க பூர்வ (ராஜஸ) செயல்கள் செய்வதால் தாமஸத்தை மட்டுப்படுத்துவதே.

14.11. உடலின் உள்ளிருந்து எங்கும் ஞான ஒளி பாய்ந்து வெளியாகிறதென்றால் அங்கு சத்வ குணம் ஆதிக்கம் செலுத்துவதாகக் கொள்ள வேண்டும். 

உரை:
சத்வ குணம் ஒளிக்கும், இலகுத்தன்மைக்கும் பங்களிப்பதால் அதனுடைய குணங்களைப் பின்வருவனவற்றில் காணலாம்.
மனச்செயல்பாடு
நடத்தை
வாழ்க்கைப் பாணியின் மற்றும் துணையாளர்களின் தேர்ந்தெடுப்பு
பழக்கங்கள்
சரியான, ஆரோக்கியமான நிலை
ஒளியை உடல்மேனியும் பிரதிபலிப்பது
சுடர் விடும் விழிகள்

14.12. ரஜஸ் மேலோங்கினால், பேராசை, ஆணவ மைய காரியங்கள், சஞ்சலத்தன்மை, ஆசைகள் ஆகியன முழுவீச்சில் இருக்கும்.

உரை:
ரஜஸ் அதன் செயல்படுதரத்தில், ஆணவத் தூண்டல் ஆசைகளையும் உடலளவு வேகங்களையும் தணிவிக்க முனைப்பு தரும். செயல்படாதபோது அது சஞ்சலத்தன்மை மற்றும் அதிருப்தி ஆகியன கொண்டிருக்கும். அதுவே தமோ குணத்துடன் கலக்கும்போது, மட்டமான உணர்ச்சி ஆட்டங்கள், நெறி தவறிய நடத்தைகளுக்கு கட்டாயப்படுத்தும்.

14.13. தமஸ் மேலோங்கினால் இருண்மை, ஜடத்துவம், சுதாரிப்பின்மை, குழப்பம் ஆகியன முழுவீச்சில் இருக்கும். 

உரை: 
தாமஸ குணமானது ஜடத்துவத்துக்கும் காட்சிப்பிழைக்கும் காரணமாகிறது. சத்வ குணத்தால் தாமஸ குணத்தை நீர்த்துப் போகச் செய்ய வழிகளாவன ----
ஆரோக்கியமான வாழ்க்கைப்பாணி
ஆன்மீக விழிப்புக்கும் வளர்ச்சிக்கும் முனைப்புறுதல்
மனோ மற்றும் செயல்படு திறமைகளை வளர்த்தல்
மனதையும் உணர்வினையும் ஆக்கபூர்வ சிந்தனைகளால் ஊட்டம் கொடுத்தல்
சுதாரிப்புடனும் திறம்படவும் செயல்படுவோருடன் தொடர்பிலிருத்தல்

மன மற்றும் உடல் சோம்பலினை முறியடிக்க, விருப்பு வெறுப்பின்றி தன்னாலானதை திறம்பட செய்தல், குழப்பத்தின்போதோ என்ன செய்யவேண்டுமென்று தெரியாத போதோ, ஜடத்துவம்தான் அதற்குப் பதிலான எதிர்வினையாகும்போது செய்யவேண்டியது என்னவென்றால்:
காரியப்பட்டியலில் முக்கியமானவற்றை முதலில் வைத்து முக்கியமல்லாதவற்றை நீக்கவேண்டும். 

அதற்காக:
உதவக்கூடிய தகவல்களைப் பெறுதல்
வழிகாட்டுதலுக்கான பிரார்த்தனை 
சாத்தியப்பாட்டு மனோபாவம்
ஆகியன ஒருவனின் கருத்துக் கோணத்தை மாற்றி விரும்பத்தக்கச் சூழ்நிலையினைக் கொண்டுவரும்.

14.14. உடலெடுத்த ஆன்மா சத்வ குண ஆதிக்கத்தில் உடல் விட்டால், அது உயர் அறிவு உடையோரின் மேம்பட்ட மண்டலத்தை அடைகிறது.

உரை: 
சத்வ குணப் பிடியானது புலனாகா மட்டங்களின் நிஜ சொரூபத்தைக் காட்டிக் கொடுப்பதான உணர்வின் உயர் தளங்களை அறிய வைக்கிறது. ஆன்ம விடுதலைக்கோ, சத்வ குணப் பிடியையும் விட்டுவிடுவது தேவையாகிறது. ஏனெனில், அது ஆன்ம அமைதியைக் குலைத்து புலனாகா மட்டங்களில் தோய்த்து அனுபவிக்கும் ருசியை வளர்க்கும்.

14.15. ரஜோ குணப் பிடியிலிருக்கையில் உடல் விடும் ஒருவன்,  செயல்களில் பற்றுள்ளோர் நடுவே பிறக்கிறான். தமஸ் குணப் பிடியிலிருக்கையில் உடல் விடும் ஒருவன், அஸமந்தனாய், மயக்குறு மனமுடையோரின் நடுவே பிறக்கிறான்.

உரை:
“உள்ளே இருப்பதே வெளியில்” எனும் மனோதத்துவ வினைக்கருத்தால் ஒருவனின் ராஜஸ ஆதிக்கம், சஞ்சலமான நிலைகொள்ளாமை மற்றும் உணர்ச்சிவேக ஆட்டரஸனை உடைமையுள்ளோருடன் கூட்டும். அதேபோல், தாமஸ குண ஆதிக்கம், தங்களின் சுபாவங்களுக்கேற்ற சூழலுடன் இணைக்கும். சத்வ குணப் பிடியில் உள்ள ஆன்மா, சவால் நிறைந்த சூழலிலும் பிறக்க நேரிடலாம். இவ்வாறு நடக்கும் போது, ஒருவன் தன் சூழலை மாற்றுவான் அல்லது அவன் சுதந்திரமான முடிவெடுக்கும் வளர்ச்சியடையும்போது அச்சூழலிலிருந்து விலகுவான்.

ராஜஸ மற்றும் தாமஸ குணப் பிடியில் உள்ள ஆன்மாக்கள் சத்வ குணச் சூழலும் பிறக்க நேரிடலாம். இவ்வாறு நடக்கும் போது, இவர்கள் அந்தச்  சூழலினால் பலனடையலாம், அல்லது இவர்கள் சூழலைக் கெடுக்கலாம், அல்லது சுதந்திரமான முடிவெடுக்கும் வளர்ச்சியடையும்போது அச்சூழலிலிருந்து விலகி, தங்களுக்குத் தோதாகவுள்ள சூழலை நாடியும் செல்லலாம். 

14.16. நற்செயலின் விளைவுகள் சாத்வீகமானது. ராஜஸச் செயல்களோ வலி கொடுக்கும். தாமஸச் செயல்களின் விளைவு அறியாமையே. 

உட்பொருள்: 
ஆக்கபூர்வ மற்றும் முழுமைச் செயல்கள் உயர்த்துவதாயும் வாழ்வூட்டம் தருபவையாயும் இருக்கும். நிலைகொள்ளாத மற்றும் சீரொழுங்கற்ற செயல்கள் ஆகியன திருப்தியின்மை மற்றும் துன்பம் தருவன. மயக்குறு மனத் தூண்டலால் நடக்கும் செயல்களோவெனில் குழப்பத்தையும் அறியாமையையும் தரும்.

14.17. சத்வத்திலிருந்து ஞானமும், ராஜஸத்திலிருந்து ஆசையும், தாமஸத்திலிருந்து அலட்சியமும் மயக்கமும் உருவாகின்றன.

உரை:
சத்வ குணத்தின் இயல்பான இருப்பிடம் மனமே. ஒழுங்காயும் சுதாரிப்பாயும் இருக்கும் மனத்தில் புறவய ஞானம் பெறுவது எளிதாகும். அதில் அகவய ஞானமோ தானாகத் திறவாகும். ராஜஸ குணமானது, ஆசையைக் கிளப்பி புலனுணர்ச்சித் தூண்டலால் அதிகார நாட்டத்தைக் கொடுக்கும். தாமஸ குணமானது இருள்மயமாக்கி வாழ்வை பந்திப்பதாய் இருக்கும்.

14.18. சத்வகுணத்தில் நிலைநின்றவர்கள் முன்னேறுவர். ராஜஸ குணத்தினரோ மத்தியதரத்தை அடைவர். கீழ்த்தரமான தாமஸ குணத்தினரின் சேரிடமோ கீழ்மையே.

உரை: 
சத்வ குண ஆன்மாக்களிள் மன நிலைப்பாடு, உணர்ச்சி  நிலைப்பாடு, மற்றும் ஆன்மீக வளர்ச்சி ஆகியன ஸ்திரம் பெற்றிருக்கும். ராஜஸ குண ஆன்மாக்கள் மன நிலைப்பாடு, கட்டுக்கடங்காமை, மனச்சாயல்களில் ஊசலாட்டம், சதா ஊற்றெடுக்கும் ஏக்கங்களைத் திருப்தி செய்து தணிவிப்பதிலும் தங்களுக்குச் சாதகமான சூழலைத் திருப்தி செய்வதிலும் தொடர்ந்து ஈடுபட்டு அலைபாய்தல் கொண்டிருப்பர். தாமஸ குண ஆன்மாக்களோவெனில், அவர்களுடைய மயக்குறு  மன நிலைப்பாட்டிற்கும் ஆன்மாவை பந்திப்பதிலும் அமிழ்ந்து கிடப்பர்.

14.19. வேறேதுமன்றிக் குணங்களே செயலுக்குக் காரணமாகக் கண்டுகொண்டு, அக்குணங்களைக்கடந்த மேலான ஒன்றையும் அறிபவன், என் நிலையை எய்துகிறான்.

உட்பொருள்:
உள்காட்சியாலும் விவேகத்தாலும், செயல்களுக்குக் குணங்களை மட்டுமே காரணமாகக் கண்டுகொண்டு, உன்னதப் பேருணர்வின் இருப்புண்மையை இவைகளின் அனைத்திற்கும் அப்பாற்பட்ட கடந்த நிலையாகக் காண்பவனே, இறைமைக்கு விழிப்பாகிறான்.

14.20. முக்குணங்களால் பிறப்பதான இவ்வுடலைப் பெற்ற ஆன்மா, இக்குணங்களைக் கடந்துசெல்லும்போது, அது பிறப்பு, இறப்பு, முதுமை, வலி ஆகியனவற்றிலிருந்து விடுபட்டு நித்யத்தை உணர்கிறது. 

உரை: 
முக்குணங்கள் செயல்பட்டே இவ்வுடலும் மனமும் உருவாகின்றன. இவைகளிலிருந்து தன் நினைப்பை எடுத்துவிட்டால், அப்போது ஆன்மா உடல் மற்றும் மனத் தொடர்புகளை விடுவித்துக் கொள்ளும். இக்கருத்தை முன்வைத்தே, சாதகன் இந்நூலில் முந்திய அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டதான பேரான்மா – ஜட (அனாத்மா) பேதம் மற்றும் ஆன்மா – உடல் பேதம் என்பவைகளை நினைவுபடுத்தி "நான் தூய பேரான்மா, உடலோ மனமோ அல்ல" எனும் கருத்தில் மனமொருமிக்க வேண்டும்.

கேள்வி என்னவென்றால், குணங்கள் எப்படி மனதையும் உடலையும் ஆள்கின்றது என்பது. அதற்கு, நமக்கு நேரிடையாகத் தெரியும் வழிமுறைகளாவன: 
நாம் உருவாக்கும் எண்ணங்கள்
நாம் முன்வைக்கும் நம் மனச் சாயல்கள்
நாம் உட்கொள்ளும் உணவு
நம் வழக்கமான வாழ்சூழல்
நம் தினசரிக் காரியப்பாடுகள்
முக்குணத் தன்மைகள் இவைகளால் வலிமையடைகின்றன. 
பிரபஞ்சத்தின் உள்ளடக்கமான தன்மாத்திரைகளை குணங்கள்தான் உருவாக்கின அவைகளாவன –
ஆகாயம்
காற்று
நெருப்பு
நீர்
நிலம்

மூவகைத் "தோஷங்கள்" இவைகளுடன் தொடர்புறுவது எங்ஙனமெனில் 
ஆகாயம்—காற்று --- வாத தோஷத்தால் நிர்வகிக்கப்பட்டு, காற்றின் பலத்தைக் கொண்டு நகர்வு மற்றும் சுழற்சியை உந்துகிறது
நெருப்பு – நீர் – பித்த தோஷத்தால் நிர்வகிக்கப்பட்டு நெருப்பின் பலத்தைக் கொண்டு மன உடலியல் மாற்றங்களைக் கவனிக்கிறது
நீர்—நீலம் – கப தோஷத்தால் நிர்வகிக்கப்பட்டு நீரின் பலத்தால் உடலின் பருவான பேரியல் நிகழ்வுகளைக் கவனிக்கிறது. 
இம்மூன்றும் சரிவிகத சமானத்தில் இருந்தால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஆதரிக்கப்படுகிறது. கூடுதல் அல்லது குறைதல் மற்றும் விகிதமாறாட்டம் ஆகியவற்றால் உடல் மனச் செயல்பாடுகளில் கோளாறு ஏற்படும்.

இவைகளின் வேலைப்பாட்டுக் கிரமம் அறிந்து, உடல் மனக் கட்டுமானச் சரிவிகிதச் சமன்பாடு பேணப்பட்டு உரிய வாழ்க்கைப் பாணி தேர்ந்தெடுக்கப்பட்டால், பூரண ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக வளர்ச்சி காண உதவும். "ஆயுர்வேத (ஆயுர் = ஆயுசு, வேத = ஞானம்)" வாழ்க்கைமுறை எனும் இவ்வமைப்பு ஆசிய நாடுகளில் மூவாயிரம் வருடங்களாக பழக்கத்திலிருக்கும் ஒன்று.

அர்ஜுனன் கேட்டான்: 
14.21. இம்முக்குணங்களைக் கடந்தவனை எவ்வாறு அடையாளம் காண்பது? அவன் நடத்தைகள் என்ன? அவன் அக்குணங்களைக் கடந்த விதம்தான் என்ன?

உரை:
திவ்ய ஊட்டம் பெற்ற ஆன்மா இப்போது கேட்பதென்னவென்றால் – விடுதலை என்பதுதான் என்ன? விடுதலை பெற்ற மனிதன்  எவ்வாறு நடந்துகொள்வான்? ஆன்மீக முழுமை எவ்வாறு அடையப்படும்?

கிருஷ்ணன் பதில் கூறினான்.
14.22. முக்குணங்களைக் கடந்த அத்தகைய மனிதன் சத்வமய ஒளியின் இருப்பையோ இல்லாமையையோ, ராஜஸமய செயல் ஆரவாரத்தின் இருப்பையோ இல்லாமையையோ, தாமஸமய மயக்கத்தின் இருப்பையோ இல்லாமையையோ விரும்புவதும் இல்லை. வெறுப்பதும் இல்லை.

உரை:
இப்போது பதிலை நாம் ஊகித்தறியலாம்: 
விடுதலை பெற்ற ஆன்மா படைப்பியற்கையின் ஆட்சிப்பரப்பின் எந்த தன்மைகளுடனும் விருப்போ வெறுப்போ இன்றி ஆன்ம ஞானத்தில் நிலைத்திருக்கும். குணசேஷ்டைகளில் ஆட்டுவிக்கப் படாமல் விடுதலை பெற்ற ஆன்மா அவைகளின் செயல்களுடன் உறவாடி அவைகளின் ஆதிக்கத்திற்கு ஒத்துழைத்தாலும் அவைகளால் முடக்கப்படுவதில்லை.

14.23. (குணசேஷ்டைகளுக்கு) கருத்தூன்றாதவன், அவைகளால் பாதிக்கப்படாதவன், “குணங்கள் மட்டுமே தோற்றத்தில் செயல்படுகின்றன” என அறிந்தவன், அலைபாயாத மனதுடன் ஸ்திரமாயிருப்பவன்,

14.24. சுகமோ துக்கமோ சமபாவனையில் வைத்திருப்பவன், பேரான்மாவுக்கு ஒத்திசைவாய் இருப்பவன், மண்கட்டியோ, கல்லோ, தங்கமோ, யாவற்றையும் பேதம் பார்க்காதவன், விருப்பு வெறுப்பு இரட்டையில் சிக்காதவன், நிலைமதி படைத்தவன், இகழ்ச்சியும் புகழ்ச்சியும் ஒன்றெனக் கருதுபவன்,

14.25. கௌரவத்தையும் அவமதிப்பையும் சமமாய் கருதுபவன், நண்பர்களுடனும் உறவினர்களுடனும் உறவாடுகையில் பற்றற்றிருப்பவன், சுயநல பூர்த்திக்கான காரியங்கள் அனைத்தையும் விட்டவன்,  - ஆகிய இவனே குணங்களை கடந்தவனாகக் கொள்ளப்படுவான். 

உரை:
விடுதலை பெற்ற ஆன்மா, அதன் திறவாகிய தன்மையால் பெற்ற இவ்வகை குணாதிசயங்களால், உலக விவகார வாழ்க்கையில் வாழ்ந்தாலும், தன்னை அதனுடன் ஐக்கியப்படுத்திக் கொள்வதில்லை. இறைமையின் இருப்புண்மை மற்றும் வாழ்க்கைப் போக்குகள் பற்றிய அதன் அறிவையும், விழிப்பு நிலையையும் எதுவுமே எந்தவிதத்திலோ தடுக்கவோ, மாற்றவோ,  குறைப்படுத்தவோ வல்லதல்ல. 

14.26. முக்குணங்களைக் கடந்தவனும் நிலைத்த பக்தியால் என்னை சேவிப்பவனுமாகிய பக்தன் தூய ஆத்மாக்களின் பெருவெளியில் லயிப்பதற்கு ஆயத்தமாகிறான். 

உட்பொருள்:
முக்குண ஆதிக்கத்தை வென்றவன், இறையுணர்வுச் சமாதியில் நிலைத்தவன் ஆகிய சாதகன், விழிப்புணர்வின் முடிவான இயல்கடந்த நிலைக்குத் தயாராகிறான்.

14.27. ஏனென்றால் நான் மரணமற்றதுமான, அழியாததுமான, என்றும் நிலைத்த நல்நெறியுடைய சனாதன தர்மமுமான, பூரண ஆனந்தமுமான பிரம்மத்தின் உறைவிடம்.

உட்பொருள்:
ஏனென்றால், என்றும் நிலைத்ததுமான, மாற்றத்திற்குட்படாததுமான, வளர்ச்சிப் பரிணாமத்தை ஆதரிக்கும் எல்லா செயல் தத்துவங்களுக்கும் ஆதாரமான, நிர்குண ஆனந்தமய அமைதியை உடையதுமான பூரணமே உன்னதப் பேருணர்வின் பரப்பு.

உரை:
பேருண்மையின் ஓர் அம்சமே நம் உள்ளார்ந்த இருப்பு என நம்மைக் கண்டுகொண்டு, அந்தப் பேருண்மைக்குத் விழிப்படைகிறோம். அது சர்வ வியாபி, எல்லா ஆன்மாக்களின் சாரம், அது எல்லோராலும் தானாகவே புரிந்து கொள்ளவும் உணரத்தக்கதாகவும் இருக்கின்றது. 

முழுமை அறிவியலான யோக கிரந்தமான, கிருஷ்ணார்ஜுன உரையாடலான, கீதோபநிஷத்தில், குணத்ரய விபாக யோகம் என மூலத்திலும், இயற்கையின் குணங்களைப் பகுத்தறியும் யோகம் என இவ்வுரையிலும்  தலைப்பிடப்பட்ட 14 ம் அத்தியாயம் நிறைவுபெறுகிறது.







Comments

Post a Comment